26 July 2016

ஜூலை 1983: நீதிக்கான முழு உரிமைக்கும் இழைக்கப்பட்ட துரோகம்

1983 கறுப்பு ஜூலை இடம்பெற்று 33 வருடங்களாகி விட்டன. இந்த 33 வருடங்களும் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். ஜூலை 1983ல் நடைபெற்ற கொடூரமான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, ஆனால் அந்த தீவிரமான குற்றங்களுக்கு நீதியின் வழியில் என்ன நடந்தது என்பதுக்கும் நாங்கள் சாட்சிகளாக இருக்கின்றோம்.
என்னுடைய கருத்தை ஒரு ஒற்றை நிகழ்வினூடாக விளக்க விரும்புகிறேன்: அதுதான் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள். இவை எந்தவித ஐயமுமின்றி மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்குரிய நடத்தையின் வரையறைக்கு உட்படுகிறது. எனக்கு கவலையளிப்பது என்னவென்றால் இந்த குற்றங்களுக்காக விசாரணைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்தான். பல்வேறு விசாரணைகள் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டன, மற்றும் சில அறிக்கைகளும் பிரசுரிக்கப்பட்டன. இதில் முக்கியமாக தெளிவுபடுத்தப்படுவது என்னவென்றால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சில மூத்த அங்கத்தவர்கள் நீதிக்கு நாசம் ஏற்படுத்துவதில் அப்பட்டமான பங்கினை வகித்தார்கள் என்பதுதான் உண்மை.
அரசாங்கம் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அதைப்பற்றிய செய்தியை பெற்று நீதியின் முழு உரிமையையும் பாதுகாப்பதற்கு மாறாக அத்தகைய  நடவடிக்கைகளைக் கண்டிக்க கூட இல்லை, உண்மையில் அதற்கு எதிராக நிரூபித்தார்கள். இதில் உள்ள விஷயம் என்னவென்றால் குற்றம் இழைத்தவர்கள் மட்டுமே குற்றத்தன்மை உடையவர்கள் அல்ல ஆனால் குற்றங்களை இழைக்கத் தூண்டியவர்களும் அதற்கான காரணகர்த்தாக்கள் ஆவர். அதை நாங்கள் நினைவுகூர்ந்தால் அவர்களின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடியும், இந்தக் கைதிகள் பயங்கரவாதம் தொடர்பான பல்வேறு வழக்குகளையும் மற்றும் விசாரணைகளையும் கொழும்பு நீதிமன்றங்களில் எதிர்நோக்கியிருந்தார்கள்.
பிரபலமான குட்டிமணியின் வழக்கு உட்பட சில வழக்குகளுக்கு நானே சாட்சியாக இருந்தேன். இயல்பாகவே இந்த வழக்குகள் ஸ்ரீலங்காவுக்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் இருந்த பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து இருந்தன. ஒரு திறந்த வழக்கு விசாரணையின் முக்கியமான நோக்கங்களில் ஒன்று முழு விடயங்களையும் பொதுமக்களின் கண்காணிப்புக்காக திறந்து விடுவது. பொதுமக்களுக்கு குற்றவியல் வழக்குகளை அவதானிக்கும் உரிமையும் மற்றும் அவர்களின் சொந்த தீர்ப்புக்கு வரும் உரிமையும் உள்ளது, அது குற்றம் தொடர்பானது மட்டுமன்றி ஆனால் அதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் தேவைகள் மற்றும் நோக்கங்கள் தொடர்பானதும் கூட. அத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய இரு பகுதியினரும் பிரதிநிதித்துவம்  செய்யும் விடயங்கள் ஊடாக பொதுமக்கள் பிரச்சினைகள் தொடர்பான ஒவ்வொரு அம்சத்தையும்; படிப்பார்கள்.
 இந்த குறிப்பிட்ட வழக்குகளில் சில முக்கிய நாடகவியல் தாக்கங்களும் கூட உள்ளன. ஒவ்வொரு அமர்வுக்கும் கைதிகள் பல பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் வாகனத் தொடரணி புடைசூழ நீதி மன்றுக்கு அழைத்து வரப்படுவார்கள். இது அதிகம் செலவு மிக்கது. அத்துடன் நீதிமன்றில் நடைபெறும் நிகழ்வுகள் கூட சமூகத்தின் கவனத்தை கவரும்.
1983ல் சிறைச்சாலைக்குள் இந்த குற்றங்களைத் தூண்டியவர்களின் பிரதான நோக்கங்களில் ஒன்று, இந்த வழக்கு விசாரணைகள் பொதுமக்களின் காட்சியாக மாறுவதை தடுப்பது மற்றும் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இந்த விடயம் தொடர்பாக இடம்பெறும் பொது விவாதங்களை நிறுத்துவது என்பதாகும். அதன்படி கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மட்டுமன்றி திறந்த விசாரணைகளின் கொள்கைள் மீதும்கூட ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது.
1983 நிகழ்வுகளைத் தொடர்ந்து வந்த காலங்களில், குட்டிமணி தொடர்பான வழக்கு விசாரணையை போன்ற அதிகம் பகிரங்கமான வழக்கு விசாரணைகளை நாம் கண்டதில்லை. குட்டிமணியின் வழக்கு விசாரணையில் கூட நீதிபதிகள் இந்த வழக்குகளை பார்த்த முறை, அரசியல் அம்சங்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு மற்றும் ஏனைய குற்றவியல் வழக்குகளில் செய்வதைப்போல குற்றங்கள் தொடர்பான சட்டப்பரிசோதனைகளில் மட்டும் கவனம் செலுத்தியது நன்கு தெரிந்தது. குட்டிமணியின் வழக்கு ஒரு சிறந்த நீதிபதியான ரியுடர் டி அல்விஸினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட முறை ஒரு முன்மாதிரியானது. தனது தீர்ப்பை வாசிக்கும் முன்பு அவர் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து நின்றார் – அது எப்போதாவது அரிதாகவே நடக்கக் கூடியது – மற்றும் அவர் கைதியை பார்த்துக் கூறியது, நிதியரசரான நான் அமர்ந்தால் எனது கடமைகளை ஒரு நீதிபதியின் ஸ்தானத்தில் இருந்து நிறைவேற்ற வேண்டும்: எனினும் அவர் தொடர்ந்தார், குட்டிமணியை ஒரு சாதாரண நபராக அவர் கருதவில்லை. என்றாவது ஒருநாள் ஜனாதிபதி குட்டிமணிக்கு மன்னிப்பு வழங்குவதற்காக தனது சிறப்புரிமையை பயன்படுத்தினால், அந்த முடிவையிட்டு மகிழ்ச்சியடையும் நபர்களில் அந்த நீதிபதியும் ஒருவாராக இருப்பார். அப்படிச் சொன்னதின் பின் தனது ஆசனத்தில் அமர்ந்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என உச்சரித்தார், அதன் பின்னர் தொடர்ந்த தீர்ப்பு மரண தண்டனையாக இருந்தது.
கைதிகளைக் கொல்வது இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் அனைத்தையும் நிறுத்துவதாக இருந்தது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் மற்றும் எதிர் வழக்கறிஞர்களுக்கும் மட்டுமன்றி நீதித்துறைக்கும் கூட இத்தகைய் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது தங்கள் சொந்தக் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த இது உதவியது. திறந்த விசாரணைகளுக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஊடாக, மக்களுக்கு அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று மறுக்கப்பட்டது, அது இத்தகைய விசாரணைகளின் அவதானிப்பாளர்களாக இருந்து தங்கள் சமூகங்களில் இடம்பெறும், முக்கியமான விடயங்களை பற்றி தங்கள் மனங்களை மாற்றிக் கொள்வதுதான்.
மிகவும் மோசமான அம்சம் விசாரணைகள் மற்றும் அது தொடர்பான விளைவுகளும் தான். சிரேஷ்ட அரச வழக்கறிஞரின் நேரடியான பங்களிப்பு விசாரணைகளுக்கு ஊறு விளைவிப்பதாகவே இருந்தது. விசாரணைகள் நடத்தப்பட்ட முறை, ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்தக் கைதிகளுக்கு நீதி வழங்க விரும்பாத மாதிரியே இருந்தது, அரசாங்கம் நீதிக்கு உரிமையில்லாத மற்றவர்களைப் போலவே அவர்களை நடத்தியது. அவர்கள் விசேஷ வகையினராக – பயங்கரவாதிகளாக – நடத்தப்பட்டார்கள் மற்றும் நீதியின் கோளத்தில் கூட அவர்கள் அவ்வாறே நடத்தப்பட்டார்கள். முழு உரிமையான நீதித்துறையின் மதிப்பு அங்கு அழிக்கப்பட்டு விட்டது. ஸ்ரீலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்பாக என்ன நினைத்திருந்தாலும் நீதியை நிலை நாட்டுவதில் ஒரு விருப்பத்தை மற்றும் தகுதியை அது வெளிப்படுத்தவில்லை.
முடிவு அதாகத்தான் இருந்தது, குடிமக்கள், அதேபோல நீதி நிறுவனங்களில் தொடர்புடையவர்கள் என ஒவ்வொருவரும் - நீதிபதிகள் உட்பட - ஸ்ரீலங்கா அரசாங்கம் நீதி தொடர்பான பிரச்சினையை அது கையாளப்பட வேண்டிய முறையில் கையாளவில்லை என்றே கண்டார்கள். பின்விளைவுகள் எதுவாக இருந்தாலும் அதைக் கவனிக்காது அவர்கள் நீதியை நிலைநாட்ட தவறிவிட்டார்கள். அந்த முடிவு இந்த வழக்கிலுள்ள கைதிகள் - பாதிக்கப்பட்டவர்களை மட்டும் பாதிக்கவில்லை, ஆனால் ஸ்ரீலங்காவின் நீதிமன்றங்களுக்கு முன்னால் வரும் ஒவ்வொருவரையும் பாதித்தது. எந்த ஒரு நபரும் அவன் அல்லது அவளது வழக்கின் முடிவு நீதி மற்றும் நீதியாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு வேண்டிய சகலதையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்யும் என யாராலும் முழு நம்பிக்கை வைக்க முடியவில்லை.
நீதித்துறையின்மேல் உள்ள இத்தகைய ஆட்டம்காணும் நம்பிக்கைதான், கடந்த சில தசாப்தங்களாக நல்லிணக்கப் பிரச்சினையை கையாண்டு வரும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. நல்லிணக்கம் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தேவையானதல்ல, ஆனால் அரசின் கட்டமைப்புக்குள்ளும்கூட அது அவசியமாக உள்ளது. ஒரு அரசாங்கத்தின் கட்டமைப்பில் இருக்கவேண்டிய இடமான மைய இடத்தில் நீதியானது இல்லாதபோது அந்த அரசாங்கத்தில் அடிப்படை குறைபாடு உண்டாகிறது. நல்லிணக்க நடவடிக்கைகள் செய்வது என்னவென்றால், மற்ற விடயங்களுக்கு மத்தியில் நீதியை நிலைநாட்டுவதற்கான உறுதியான திறனை மறுசீரமைத்து, அரசாங்கத்தின் கட்டமைப்பை அது இருக்க வேண்டிய இடத்தில் மீண்டும் நிலை நாட்டுகிறது.
இன்று ஸ்ரீலங்கா அரசாங்கம் நீதியை நிலை நாட்டுவதற்கு திறமை மற்றும் அர்ப்பணிப்புடன் தன்னை பிரதிநித்துவப் படுத்தவில்லை. அதன் அர்த்தம், அது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த தகுதியான ஒரு ஜனநாயக அரச கட்டமைப்பில் தன்னை இணைத்துக்கொள்ள முயற்சி செய்யும் ஒரு அரசாங்கமாக இருக்கவில்லை என்பதே. அது ஆட்சியாளர்கள் உட்பட அனைவரையும் ஆபத்தில் தள்ளிவிடும்.
இத்தகைய சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கட்டாயமாக காணாமற் போக்கடிக்கப் பட்டவர்கள் பற்றி விசாரணை மேற்கொள்ளும் முயற்சியை, அவரைப் பொறுத்தவரை அது ஆயுதப்படைகள் மீதான ஒரு தாக்குதல் என்று சொல்லி கண்டிப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை. திரும்பவும் நாங்கள் காண்பது என்ன? அரசாங்கம் அவ்வாறு முடிவு செய்யும்போது நீதியையும் தியாகம் செய்ய வேண்டும் என்கிற ஒரு யோசனையைத்தான். அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் இந்த விடயத்தில் இன்னும் ஒருமித்த ஒரு முடிவுக்கு வராமலிருப்பது இதிலுள்ள ஆபத்து. அடிப்படை கருத்துடன் நல்லிணக்கத்தை கையாளும்போது இந்த ஆபத்தான நிலமை முடிவுக்கு வருகிறது. ஒரு அரசியலமைப்பை உருவாக்கும் போது, நீதி நிருவாகம் தொடர்பான சார்புநிலை வாதத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் இல்லாமற் செய்யவேண்டும். 1983 ல் செய்யப்பட்ட குற்றங்கள் மற்றும் மறுக்கப்பட்ட நீதி என்பன அதன்பின் பொது அறிவுக்கு அப்பால் செல்கின்றன. எனினும் மகத்தான இந்த ஏற்றத்தாழ்வு மற்றும் அதன்மூலம் அது ஒவ்வொரு வகையான சமூக ஆபத்துக்களிலும் தன்னை வெளிப்படுத்தி வருவதை இந்த ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா சமூகம் உணரத் தவறிவிடும்
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

நன்றி- தேனீ

No comments:

Post a Comment