08 August 2016

சிறை ஆஸ்பத்திரி ஊசியால் கைதியின் உடல் நிலை பாதிப்பு

அநுராதபுர சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் ஏற்றப்பட்ட ஊசிகளால் தமிழ் அரசியல் கைதியொருவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அநுராதபுர சிறைச்சாலையில் சென்று பார்வையிட்டுத் திரும்பியபோதே அவர் இதனைக் கூறினார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள குறித்த கைதியை சந்தித்து கதைத்தபோது, தனக்கு இரண்டு ஊசிகள் ஏற்றப்பட்ட பின்னரே உடல்நிலை மோசமடைந்ததாக கூறியதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கைதியொருவர் யாழ்ப்பாண நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு மீண்டும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளார். இவர் தனது விடுதலையை வலிறுயுத்தி இரண்டு மாதங்களுக்கு முன்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
உண்ணாவிரதத்தில் உடல்நிலை மோசமடைய அவருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் ஊசியொன்று ஏற்றப்பட்டுள்ளது. இந்த ஊசி ஏற்றப்பட்ட பின்னர் தனது உடல் தசைகள் சோர்வடைந்து உடல் பலவீனமானதாக குறித்த கைதி தன்னிடம் கூறியதாகவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். ஊசி ஏற்றிய பின்னரே தனக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும், இரண்டாவது தடவை ஊசி ஏற்றிய பின்னர் மூளை மாறாட்டம் ஏற்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில்தான் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசியல் கைதி சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். ஏன் அவரை ஏனைய கைதிகளுடன் இணைக்காமல் தனியாக வைத்தியசாலையில் வைத்துள்ளீர்கள் என சிறைச்சாலை அதிகாரிகளிடம் சிவசக்தி ஆனந்தன் எம்பி வினவியுள்ளார். வைத்தியர்களின் ஆலோசனையின் பெயரிலேயே அவ்வாறு தனியாக தங்கவைத்திருப்பதாக அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
அதேநேரம், தமக்கான வழக்குகளை வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களில் நடத்தினால் மொழிப் பிரச்சினையின்றி தமது நிலைப்பாட்டை நீதிபதிகளுக்கு விளங்கப்படுத்த முடியும் என்பதை தமிழ் அரசியல் கைதிகள் தன்னிடம் வலியுறுத்திக் கூறியிருந்ததாகவும் சிவசக்தி ஆனந்தன் எம்பி தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாயின் அரசியல் கைதிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளின் பெற்றோர், மாவீரர் குடும்பங்கள் என பலதரப்பினரும் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்துள்ளனர்.
ஏதாவது விமோசனம் கிடைக்கும் என நம்பி வாக்களித்த அவர்களுக்கு அரசாங்கம் இதுவரை எந்த தீர்வையும் வழங்கவில்லையென சிவசக்தி ஆனந்தன் எம்பி மேலும் குறிப்பிட்டார்.
நன்றி- தினகரன்

No comments:

Post a Comment