08 August 2016

போராளிகளின் மர்ம மரணங்கள் பின்னணிகள் ஆராயப்பட வேண்டியது அவசியம்


புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பலர் மர்மமான முறையில் மரணமடைந்து வருகின்றனர் என ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்ற நிலையில், இதன் பின்னணி தொடர்பில் முழுமையானதும், பகிரங்கமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும், இவர்கள் உரிய உடல் மற்றும் உள ரீதியிலான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்பட வேண்டுமென்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், புனர்வாழ்வுக்கு உட்படத்தப்பட்டுள்ள முன்னாள் போராளிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது முன்னாள் போராளிகள் சிலரது கருத்துக்களும் இந்த விடயம் சார்ந்து பெறப்பட்டு ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில் நல்லிணக்கத்திற்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் நிகழ்வு கடந்த 30ம் திகதி ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோது, புனர்வாழ்வு வழங்கப்பட்டிருந்த காலத்தில் தங்களுக்கு இரசாயன உணவு தரப்பட்டாதாகவும், ஊசி ஏற்றப்பட்டதாகவும் முன்னாள் போராளி ஒருவர் கூறியிருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தது. அதே நேரம், மேற்படி போராளிகள் உடற் பரிசோதனைக்கு உட்படத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள்  இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறானதொரு நிலையில் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக உரிய விசாரணைகளை மேற்கொள்வது அவசியமாகும். அதே நேரம் இப் போராளிகள் யுத்த காலகட்டங்களின்போது அந்தச் சூழலுக்கேற்ப உள மற்றும் உள ரீதியிலான கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் என்பதால், தற்போதைய சூழ்நிலையில் மனமாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு உள ரீதியிலான பலஹீனங்களையும் கொண்டிருக்க வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால் இவர்களுக்கு உடல் ரீதியிலானதும், உள ரீதியிலானதுமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய சிகிச்சைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment