08 August 2016

மாற்றமடையும் அணுகுமுறைகள்

ஒன்றரை லட்சம் படைகளாலும் அவர்கள் கொண்டு வந்த பீரங்கிகளாலும் துப்பாக்கிகளாலும் செய்ய முடியாத காரியங்களை மிகக் கச்சிதமாக ஒரு துணைத் தூதுவராலயம் செய்து கொண்டிருக்கிறது. படைத்தளபதிகளுக்கும் பீரங்கிகளுக்கும் பதிலாக தூதரகப்பிரதானிகளும் அரவணைக்கும் நடவடிக்கைகளும்.
படித்தவர்கள், சமயப்பெரியோர்கள், வியாபாரிகள், முதலீட்டாளர்கள், நிர்வாகிகள், ஊடகவியலாளர்கள், கலை, இலக்கியத் துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் எனச் சகலரையும் “நேசக்கரம்“ கொண்டு அணைத்துள்ள தூதரகம் மக்களுடன் மிக நெருக்கமாக, அந்நியோன்யமாக கலந்துள்ளது.
கோயில் திருவிழாக்கள், நூல்வெளியீடுகள், நாடக விழாக்கள், பாடசாலை நிகழ்ச்சிகள்,  இசை விழாக்கள், விவசாயிகளின் விதைப்பு மற்றும் அறுவடைக்கால நிகழ்வுகள், கடற்தொழிலாளர்களின் கலந்துரையாடல்கள், ஊடகத்துறையினரின் சந்திப்புகள், அரசியல்வாதிகளின் ஒன்றுகூடல்கள், புத்திஜீவிகளுடனான உரையாடல்கள், முன்பள்ளி நிகழ்ச்சிகள் எனச் சகலதிலும் தூதுவராலயத்தின் முக்கிய பிரதானிகள் பங்கேற்கின்றனர்.
இப்பொழுது இந்தத் தூதுவராலயம் தமிழ்ச் சனங்களின் ஒரு அங்கமாகி விட்டது. மக்கள் மிகச் சாதாரணமாக தூதுவராலயப்பிரதானிகளுடன் உறவாடுகின்றனர். அவர்களுடன் கலந்து பேசித்தங்களுடைய குறைகளைச் சொல்கிறார்கள். தேவைகளைக் கேட்டுப்பெறுகிறார்கள். கல்விக்கான உதவிகள், கலாச்சார மேம்பாட்டுக்கான பங்களிப்புகள், தொழில் முயற்சிக்கான ஆலோசனைகள், உட்கட்டுமாணத்தை விருத்தி செய்வதற்கான ஒதுக்கீடுகள் எனப் பலவகையிலும் பிரதானிகளின் பங்களிப்புப்பணிகள் தொடர்கின்றன.
தாங்கள் வாக்களித்துத் தெரிவு செய்த அரசியல் பிரதிநிதிகளிடம் கூட மக்கள் இப்படித் தங்களுடைய குறைகளைச் சொல்லி, தேவைகளைக் கேட்பதில்லை. உரிமை பாராட்டுவதில்லை. விதிவிலக்கு தேவானந்தா தரப்பு. ஆனால், அரசியல் ரீதியான மட்டுப்பாடுகள் தேவானந்தா தரப்பிற்கிருக்கிறது. இதைத் தவிர்த்தால், ஏனைய நமது அரசியல்வாதிகளின் நடைமுறைகளும் உறவும் மக்களுக்கு அந்நியமானதே. அவர்களில் யாரும் தேர்தல்காலத்தைத் தவிர மக்களுடன் உறவு கொள்வதேயில்லை.
குறித்துச் சொல்வதாக இருந்தால், சம்மந்தனுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் மக்களிடம் இல்லாத அளவு நெருக்கமும் மதிப்பும் இந்தியத்துணைத் தூதுவராலயத்தின் பிரதானி நடராஜனுக்குண்டு. இன்னும் சொல்லப்போனால், கூட்டமைப்பில் எவருக்குமில்லாத ஒரு அறிமுகத்தையும் நெருக்கத்தையும் நடராஜன் பெற்றிருக்கிறார். இதுவொன்றும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. சம்மந்தப்பட்டவர்களும் தமிழ் அரசியல் ஆர்வலர்களும் அவதானிக்க வேண்டிய, கற்றுக்கொள்ள வேண்டிய, தெரிந்து கொள்ளவேண்டிய விசயமாகும்.
சனங்கள் தங்களுடைய தேவைகளுக்காக  இந்தத் தூதுவராலயத்தை நாடுகின்றனர். ஆம் இந்தியத்தூதுவராலயமே அது.
இந்தியத் தூதுவராலயம் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருக்கும் துணைத்தூதுவராலயம் நெகிழ்ச்சி மிக்கதாக உள்ளது. இதனால், கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகம் செல்வாக்குப் பெற்ற தரப்பாக வளர்ச்சியடைந்திருக்கிறது. “எங்கள் வீட்டுப் பிள்ளை“ என்று சொல்லுமளவுக்குப் பெரும்பாலானவர்களின் மனதில் துணைத் தூதுவராலயத்தின் பிரதானிகளில் முக்கியமானவரான திரு. நடராஜன் நெருக்கமாகியிருக்கிறார். போகிற போக்கைப் பார்த்தால் கறிக்கு உப்புப் புளியை (சுவை) பார்க்கிற அளவுக்கு இந்த நெருக்கம் கூடியிருக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது.
இந்தியத்தூதுவர்களில் அதிகம் அறியப்பட்டிருந்தவர் ஜே.என். டிக்ஸித். இப்பொழுது அதையும் விட அறியப்பட்டவராக மாறியிருக்கிறார்  நடராஜன். நடராஜனும் அவரோடிணைந்த ஏனைய பிரதானிகளும் தமிழ்மக்களுக்கு ரொம்ப நெருக்கமானவர்களாகியுள்ளனர். டிக்ஸிற் கடுப்பானவர், கடும்போக்காளர், இலங்கையர்களின் மனதில் ஒரு எதிர்மறைச் சித்திரமாக உருவானவர் என்றால் நடராஜன் கனிவானவர், நெருங்கக்கூடியவர், நட்பானவர், உறவினர் என்பதாக உள்ளது. ஆட்களைத் தெரிவு செய்வது தொடக்கம் நடவடிக்கைளை மாற்றியமைப்பது வரையில் இந்தியா ஆழமாகச் சிந்தித்தித்துத்தானிருக்கிறது.
இந்தியத் துணைத்தூதுவராலயத்தின் இந்த நடவடிக்கை ஏற்கனவே இந்திய அமைதிப்படையினாலும் இந்திய அரசினாலும் உண்டாகியிருந்த இடைவெளிகளைக் குறைத்துள்ளது. இந்த இடைவெளிக்கு விடுதலைப்புலிகளுக்கும் சம பொறுப்புண்டு என்றபோதும் புலிகள் இன்றில்லாத நிலையில், தமது தரப்பின் பொறுப்பை ஏற்றுச் சீர்செய்யும் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்வதற்கு முயற்சிக்கிறதா? என்று எண்ணத்தோன்றுகிறது.
குறிப்பாகக் கடந்த காலக் காயங்களை ஆற்றும் விதமாக போருக்குப் பிந்திய நிலைமைகளைக் கையாள்வதில் அக்கறையைக்காட்டுகிறது இந்தியா. இதற்காக போரினால் அழிவடைந்த வீடுகளை நிர்மாணிக்கும் பணியில் அது ஐம்பதாயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்வந்ததை இங்கே நினைவு கூரலாம். தவிர, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி, யாழ்ப்பாணத்தில் கலாசார மத்திய நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டம் உட்பட பல பாடசாலைகளை வளமாக்குவதற்கான உதவிகள் என இந்த நடவடிக்கைகள் விரிந்து செல்கின்றன.
மட்டுமல்ல,  மிக நெருக்கமாக கலந்துரையாடல்களையும் சந்திப்புகளையும் செய்து வருகிறது தூதுவராலயம். வெளிநிகழ்ச்சிகளிலும் கூடச் சர்வசாதாரணமாக துணைத்தூதர் நடராஜன் போன்றவர்கள் கலந்துவருகிறார்கள். யாழ்ப்பாணத்துக்கு வெளியே கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விஜயம் செய்திருக்கின்றனர். தவிர, கல்வி, கலாச்சாரச் செயற்பாட்டு நிகழ்வுகளிலும் பிரதானிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். சாதாரண முன்பள்ளிகளின் நிகழ்வுகளில்கூட நடராஜனைக் காணலாம். சிரித்த முகத்தோடு நலம் விசாரிக்கிறார் பலரையும்.
இவையெல்லாம் தமிழ்மக்கள் இந்தியாவை நெருங்கி வருவதற்கான வாய்ப்புகளாகும். இடைவெளிகளைக் குறிப்பதற்கான முயற்சிகளாகும்.
இது ஒருவகையில் கற்றுக்கொண்ட பாடங்களின்  விளைவு எனலாம். அதாவது, கடந்த கால அனுபவங்களில் இருந்தும் அணுகுமுறைகளில் இருந்தும் இந்தியா  பெற்ற பாடங்கள். 1980 களில் இலங்கையுடனான இந்தியாவின் உறவும், அன்றைய அரசியற் சூழலில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளும் இந்தியாவுக்கு எதிர்விளைவுகளையே உண்டாக்கியது.
அப்பொழுது இலங்கையின் அரசியல் நிலைமைகளைச் சீர்ப்படுத்துவதற்காக இந்தியா எடுத்த முயற்சிகளும் அதற்காகச் செலவழித்த பணமும் அதிகம். ஒன்றரை லட்சம் படைகளும் தளபதிகளும் ஆலோசகர்களும் புலனாய்வாளர்களும் படைக்கலங்களும் விமானங்களும் என ஒரு பெரிய செலவை இந்தியா செய்தது. இருந்தும் நன்மைகளுக்குப் பதிலாக தீமைகளும் பாதிப்புகளுமே ஏற்பட்டன. மட்டுமல்ல இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவும் பாதிக்கப்பட்டிருந்தது. தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்குமிடையிலான வரலாற்று உறவும் நெருக்கமும் கூட சிதைந்து போய் பெரியதொரு இடைவெளி ஏற்பட்டிருந்தது. இந்தியா நம்பிய இயக்கங்களும் தலைவர்களும் இந்தியாவுக்கு உபயோகமாக இருக்கவில்லை. பதிலாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் குறிப்பாகத் தமிழ்ச்சனங்களுக்குமிடையில் முரண்களே உருவாகியிருந்தன.
இந்த நிலைமை ஏறக்குறைய கால்நூற்றாண்டுகளுக்கும் அதிகமான காலமாக நீடித்தது. இப்படியிருந்த, நெருங்கக்கடினமாக இருந்த நிலையைத்தான் இப்பொழுது இந்தியா மாற்றியமைத்து வருகிறது. அதனுடைய தந்திரோபாய அடிப்படைகள் மாற்றமடைந்திருக்கின்றன. கட்டளைகளைப் பிறப்பிக்கும் படைத்தளபதிகளை விட, காவலரண்களை அமைத்து அதிகாரத்தை நிலைநாட்டும் படையினரை விட, கனிவாகப் பேசிப்பழகி, நெருக்கத்த அதிகரிக்கக்கூடிய அதிகாரிகளைக் கொண்ட, சிவில்தன்மை மிக்க தூதுரகப்பிரதானிகளே சிறந்தவர்கள் என அது உணர்ந்திருக்கிறது.
அதன்விளைவே இன்றைய தூதரக அதிகாரிகள். மட்டுமல்ல, தன்னுடைய துணைத்தூதரகங்களை அது கண்டி, அம்பாறை, யாழ்ப்பாணம் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அமைத்துள்ளது. இவற்றுக்கென குறிப்பிட்டளவு நிதியை ஒதுக்குவதற்கும் இந்தியா முன்வந்திருப்பது இந்த அடிப்படையில்தான். பெரிய ஆளணியுடைய படைகளை அனுப்பி, அதற்குப் பெரிய செலவுகளைச் செய்ததை விட, அதற்காகப் பல சவால்களைச் சந்தித்ததை விட, நெருக்கடிகளை எதிர்கொண்டதை விடத் தற்போதைய சினேகபுர்வமான நடவடிக்கைக்கு செலவழிப்பதொன்றும் அதிகமில்லை. பதிலாக இது அதிக லாபமானதும் கூட.
இந்தத் தூதுவராலயங்கள், வெறுமனே விசா வழங்கும் நிலையங்களாக மட்டும் இயங்கவில்லை. பதிலாக இலங்கையுடனான உறவை அரசாங்க மட்டத்தைக் கடந்து, அரசியற் தரப்பினர்களின் வளையத்தைக் கடந்து சாதாரண சிவில் மட்டத்துக்கு வளர்க்க முயற்சிக்கின்றன. இதன்மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவையும் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் மேலும் ஸ்திரப்படுத்தலாம் என்றும் எண்ணுகின்றன. இத்தகைய நெருக்கத்தைக் குறித்த ஒரு அடிப்படையான புரிதலைச் சாதாரண மக்களிடத்தில் ஊட்டிவிட்டால், வரலாற்றின் வேர்களை அடையாளம் காட்டிவிட்டால், பிறகொருபோதும் மக்கள் தங்கள் வேருக்கு எதிராக – அதாவது இந்தியாவுக்கு எதிராகச் சிந்திக்க மாட்டார்கள் என்று  கருதுகிறது இந்தியா.
புவிசார் அரசியல் பொருளாதாரப் போட்டியில் இலங்கை மீது பல்வேறு சக்திகளும் ஆதிக்கம் செலுத்த முற்படுகின்றன. இதில் இந்தியாவுக்குப் பெரும் சவாலுண்டு. பிராந்திய சக்தியாகவும் இலங்கைக்கு அண்மித்த பிராந்தியத்தில் இருப்பதாலும் இலங்கையின் பிடியை இந்தியா இழக்க முடியாது. ஆகவே தன்னுடைய பிடியைப் பலமாக வைத்துக் கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்குண்டு. இதற்காக அது தனக்கு வாய்பான வரலாற்று உறவையும் மொழி,மதம், கலைகள் போன்ற பண்பாட்டு வேர்களையும் பயன்படுத்த முயற்சிக்கிறது.
இதுவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள நெருக்கத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கும் இலங்கையில் இந்தியாவின் செல்வாக்கைக் கூட்டிக்கொள்வதற்கும் புதிய நடவடிக்கைகளாக விரிந்திருக்கின்றன. தவிர, கடலும் நில அமைவும் இடைவெளியை உண்டாக்கியுள்ளதே தவிர, ஏனைய மத, மொழி, பண்பாட்டு அம்சங்கள் அத்தனையும் இந்தியாவுக்குச் சாதகமாகவே உள்ளன.
தனியே அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் இயக்கங்களையும் தலைவர்களையும் நம்பிய காலம் மலையேறி விட்டது. பதிலாக மக்களிடம் உணர்வு ரீதியாகக் கொள்ளும் நெருக்கமே வலுவானது என்ற ஆழமான நம்பிக்கையின் விளைவையே இன்றைய இந்திய அணுகுமுறை. இதையே நாம் பார்க்க வேணும். இதை தமிழ் அரசியற் தரப்புகள் கற்றுக்கொள்வது அவசியம். அதைப்போலச் சிங்களத்தரப்பினரும் இலங்கை அரசும் கற்றுக்கொள்வது அவசியம்.
சிங்கள அரசியற் கட்சிகளோடும் தலைவர்களோடும் மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், சிங்களச்சமூகத்துடன் – மக்களுடன் தமிழ்த்தரப்பு நெருக்கமாக வேண்டும். அந்தச் சமூகத்தின் அத்தனை சக்திகளுடனும் உறவை வலுப்படுத்த வேண்டும் என்பதை. அதைப்போல முஸ்லிம் சமூகத்தோடு தமிழர்களும் தமிழர்களோடு முஸ்லிம்களும் புதிய உறவு நிலையைக் கொள்ள வேணும். அவ்வாறே தங்களுடைய இரண்டு கால்களுக்கிடையில் சிறுபான்மைச் சமூகங்களை வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, நட்புடன், நல்லுறவாகி, புதிய சமாதான நிலைகளை கொழும்பும் சிங்களச் சமூகமும் எட்டுவதற்கு முயற்சிப்பது அவசியம். கற்றுக்கொண்ட பாடங்கள் என்பது மற்றவர்களுக்கானதல்ல. ஒவ்வொருவரும் முதலில் தமக்குத்தாமே அந்தப் பாடங்களைப் பட்டறிவைப் படித்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் இத்தகைய அணுகுமுறையை ஒத்ததாகவே அமெரிக்காவின் முயற்சிகளும் முனைப்புகளும் உள்ளன. இதற்காக அது புத்திஜீவிகளையும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் அமைப்புகளையும் வளைத்துப்பிடிக்கிறது. சில அமைப்புகளைப் புதிதாக உருவாக்க முயற்சிக்கிறது. ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் வசியம் பண்ணுகிறது. ஆனால், இந்தியாவிற்கு வாய்ப்பான அளவுக்கு அமெரிக்காவுக்கு வரலாற்றுறவோ,  நெருக்க உணர்வோ, பண்பாட்டுறவோ இல்லை. இருந்தாலும் அது மக்களிடமும் நடுத்தர வர்க்கத்திடமும் உயர் வர்க்கத்திடமும் காணப்படும் ஜனநாயக வேணவாக்களையும் புதிய சுயாதீன அலைகளைக் குறித்த விருப்பையும் சாதகமாகப் பயன்படுத்தித்தன்னை வலுப்படுத்த முயற்சிக்கிறது.
இப்படி வலுமிக்க போட்டியாளர்களுக்கிடையில் இலங்கை இன்னும் பந்தாடப்படும் களமாகவே உள்ளது. உலக ஓட்டமும் அரசியல் வித்தைகளும் இப்படித்தானிருக்கும். இதுதான் வரலாறு. இந்த வரலாற்றில் நாம் எப்படி இருக்கப்போகிறோம், இயங்கப்போகிறோம் என்பதே இன்றைய விவாதத்திற்கும் சிந்தனைக்குமுரிய பொருளாகும். இதைக்குறித்து சிந்திப்போம். விவாதிப்போம்.
- கருணாகரன்-

நன்றி- தேனீ

No comments:

Post a Comment