பௌத்தம், இந்து மதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய அனைத்து மதங்களையும் உள்ளடக்கக் கூடிய வகையில், தேசிய ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் ஞாயிறு தின அறநெறிப் பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கான நிகழ்ச்சித் திட்டம் அண்மையில் கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்ச்சித் திட்டத்தை நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஞாயிறு தின அறநெறிப் பாடசாலைகளின் கற்பித்தலில் தேசிய ஒருமைப்பாட்டினையும், நல்லிணக்கத்தினையும் பற்றியதான எண்ணக்கரு மற்றும் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தல், அதனை பாடவிதானங்களில் உள்வாங்குவது தொடர்பான நிகழ்ச்சித் திட்டம் அண்மையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இது அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும், மாவட்ட அலுவலர்களுக்கும் மிகப் பயனுள்ளதும், மிக்க வினைத்திறன் வாய்ந்ததுமான நிகழ்ச்சித் திட்டமாக அமைந்திருந்ததென தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி குறிப்பிட்டார்.
பல்வேறு மதக் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் மதிப்பளிக்கின்றதும்,சண்டை சச்சரவுகளற்றதும், சமாதானத்தை ஆசிக்கின்றதும், நல்லிணக்கத்தை நேசிக்கின்றதுமான சமூகமொன்றைத் தோற்றுவிப்பதுடன வளமிக்கதும், அமைதியானதுமான சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புவதே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் தொலைநோக்கும் குறிக்கோளுமாகும்.
மதம், மொழி மற்றும் இனம் தொடர்பாக எவ்வித பாகுபாடுகளும் காட்டாது பல்வகைத்தன்மைக்கு மதிப்பளித்தல், ஒருமைப்பாட்டினையும் நல்லிணக்கத்தினையும் மேம்படுத்தல், அது குறித்த வசதியளித்தல்களின் ஊடாக முழுமை பெற்ற சமூகமொன்றைக் கட்டியெழுப்புதல் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான தொனிப்பொருளும் இலக்குமாக இனங்காணப்பட்டுள்ளன.
பல்வகைமை சமூகமொன்றில் பல்வேறு மொழி பேசுகின்ற, பல்வேறு மதங்களையும் இனங்களையும் சார்ந்த மக்களை ஒற்றுமையாகவும் ஒன்றிணைத்தும் வாழ்வதற்கான வலுவையும், திறனையும் வழங்கக் கூடிய சக்தி மதங்களுக்கே உண்டு என்பது பற்றி இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. அன்பு, இரக்கம், கருணை, மன்னிப்பு, சரிநிகர்த்தன்மை, சகோதரத்துவம் மற்றும் அன்னியோன்யம், கௌரவமான வாழ்வு என்பனவற்றையே சகல மதங்களும் போதிக்கின்றன.இந்த அமர்வின் போது, மதம் என்பது மனித நாகரிகத்தின் அரியதோர் வழிகாட்டியாக அமைவதாகவும், ஒவ்வொருவரும் தத்தமது மதங்களில் போதிக்கப்பட்டுள்ள சமாதானம், ஒற்றுமை, பொறுமை போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு பயிற்சியளிக்கப்படுதல் வேண்டும் என்றும் ஜனாதிபதியின் கூற்று தொடர்பாக அவதானஞ் செலுத்தப்பட்டது.
அனைத்து இனங்களையும் சேர்ந்த ஒவ்வொரு நபரும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் ஒன்றிணைந்து கைகோர்த்துச் செயற்படுதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.
No comments:
Post a Comment