28 May 2018

மக்களுக்கு எதிர்கால நம்பிக்கையை ஊட்டும் ஐக்கியம் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அவசியம்.


கடந்த காலப் பகையை மறந்த - சமகாலத் தேவையை உணர்ந்த - மக்களுக்கு எதிர்கால நம்பிக்கையை ஊட்டும் ஐக்கியம் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அவசியம்.

தற்போதைய தமிழர் அரசியல் தலைமையின் மீது தமிழ் மக்கள் விரக்தியும் - வெறுப்பும் - சலிப்பும் உற்றிருக்கிறார்கள் என்பதைத்தான் நடந்து முடிந்த உள்ளுராட்சி அதிகாரசபைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருக்கின்றன. சரிபிழைகளுக்கு அப்பால் - பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு அப்பால் இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் வடக்கு கிழக்குத் தமிழர்களால் யுத்த முடிவிற்குப் பின்னர் கடந்த சுமார் பத்துவருட காலமாக தேர்தல்களிலே அங்கீகரிக்கப்பெற்ற அரசியல் தலைமையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அடையாளம் காணப்பட்டிருந்தது. தலைவர்கள் என்று கருதப்பட்டோர் அல்லது தலைவர்கள் என்று மக்கள் நம்பிக்கை வைத்தவர்கள் தமக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடந்து கொள்ளாத போதிலும் - தலைவர்கள் என்று நம்பியவர்கள் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்து வாய்ச் சொல்லில் வீரர்களாக வலம் வந்த போதிலும்,தமிழர்களுடைய ‘அரசியல் கட்டுக் கோப்பு’ உடைந்து விடக்கூடாது என்பதற்காகவே ஆட்களைப் பார்க்காமல் கட்சியைப் பார்த்துத் தமிழரசுக் கட்சியின் வார்த்தைகளில் கூறுவதாயின் தும்புக்கட்டை நிறுத்தினாலும் கூட அந்தத் தும்புக்கட்டுக்கு - அது நன்றாகக் கூட்டாது என்று தெரிந்தும் கூட - வாக்களித்து வந்தார்கள்.

தமிழ் அரசியல் தலைவர்களும் ‘ஓடுகிறவனைக் கண்டால் துரத்துபவனுக்கு இலேசு” என்பது போலவும் ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்’ என்பது போலவும் மக்களின் அறியாமையையும் மக்களின் அவலங்களையும் தங்கள் அரசியலுக்கான முதலீடாகத் கருதித் தங்களை வளர்த்துக் கொண்டார்களே தவிர மக்களையும் அவர்களின் சமூக பொருளாதாரத் தேவைகளையும் அசட்டை செய்தார்கள். சமூகச் செயற்பாட்டுப் பின்னணியோ அல்லது போராட்டப் பின்னணியோ இல்லாது தேர்தலில் நிற்பதற்கென்றே தமிழரசுக்கட்சிக்கு வந்தவர்கள் எல்லாம் தலைவர்களாக வலம் வரத் தொடங்கினர். இப்போக்கினைத் தொடர்ந்தும் பொறுத்துக் கொள்ளமுடியாத  வடக்குகிழக்குத் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் குறிப்பாகத் தமிழரசுக் கட்சிக்கு இத்தேர்தல் மூலம் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். தமிழர் அரசியல் தலைமை குறிப்பாகத் தமிழரசுக் கட்சி தன்னைத் திருத்திக் கொள்ளவில்லையாயின் எதிர்காலத்தில் வடக்கு கிழக்குத் தமிழர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் சலிப்புற்று பௌத்த சிங்கள பேரினவாதத் தேசியக் கட்சிகளுக்குப் பின்னால் சென்று விடக்கூடிய சாத்தியப்பாட்டையும் - ஆபத்தையும் இத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருக்கின்றன. ஆனால் தமிழரசுக் கட்சியோ இன்னும் தன் தவறை உணராமல்,தொங்குசபைகளாக விளங்குகின்ற அதாவது எந்தத் தமிழ்க்கட்சியும் ஆட்சியமைக்கக் கூடிய அறுதிப் பெரும்பான்மையைப் பெறமுடியாமற்போன சபைகளில்கூட குறிப்பாகப் பிரச்சினைக்குரிய கிழக்கு மாகாணத்தில் கூட ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு நிபந்தனைகள் போட்டது. உள்ளுராட்சிச் சபைகளில் அதாவது அடிமட்டத்தில் தமிழர்களை வலுப்படுத்த வேண்டும் என்ற யதார்த்தத்தைப் புறந்தள்ளிவிட்டு கட்சியினதும் கட்சியிலுள்ள சில தனிநபர்களினதும் நலன்களை நியாயப்படுத்துவதற்காகக் கொள்கை – கோட்பாடு என்று உதட்டளலில் மட்டும் வார்த்தை ஜாலங்களைத் தமிழரசுக் கட்சி நெட்டுருப் பண்ணியது. தமிழர்ளை ஐக்கியப்படுத்த முடியாத வார்த்தைச் சோடிப்புக்களால் தமிழர்களுக்கு என்ன இலாபம் கிடைத்தது.

சரி பிழைகளுக்கு அப்பால் அதாவது ஆயுதப் போராட்டத்தில் இருந்த பலவீனங்களான இயக்க மோதல்கள் - சகோதரப் படுகொலைகள் - ஆட்கடத்தல்கள் - கப்பம் வசூலிப்பு – அரசியல் படுகொலைகள் - அப்பாவித் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்கள் - மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாத ஆயுத நடவடிக்கைகள் போன்ற பின்னடைவு அல்லது மறைக் காரணிகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் எல்லாத் தமிழ்ப் போராளி இயக்கங்களுமே தமிழ்த் தேசியத்துக்காகப் போராடியவர்கள்தான். அனைத்துப் போராளி இயக்கங்களிலும் இணைந்து கொண்ட அனைத்து இளைஞர்களும் தங்கள் இளமைக்காலக் கனவுகளைப் புதைத்துவிட்டுச் சமூகத்திற்காகப் போராடப் புறப்பட்டவர்கள்தான். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு இன்று ஜனநாயக அரசியலுக்கு வந்துள்ள எந்த இயக்கமும் உள்ளத்தளவில் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்கள் அல்ல. தவறுகள் நடந்துள்ளன. அதுவேறு விடயம். ஆனால் சரிபிழைகளுக்கு அப்பால் அவர்களின் போராட்டத்தை - உயிர்த்தியாகத்தை – உறுதியை – துணிச்சலை– ஒர்மத்தை – வைராக்கியத்தை – வீரத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. கொச்சைப்படுத்தவும் கூடாது.

தவறுவிடாத எந்தப் போராளி இயக்கங்களும் இல்லை. தவறுவிடாத எந்த மிதவாதக் கட்சிகளும் இல்லை. எல்லோரும்; சரியும் செய்திருக்கிறார்கள்@ எல்லோரும் பிழையும் செய்திருக்கிறார்கள். முழுமையாகச் சரி என்று எவரும் இல்லை. முழுமையாகப் பிழையென்றும் எவரும் இல்லை. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. அரசியல் என்றாலும் சரிதான்; அல்லது ஆயுதப் போராட்டம் என்றாலும் சரிதான் தமிழர்களைப் பொறுத்தவரை பழையதைக் கிண்டுவது குப்பையைக் கிளறுவதற்குச் சமன். எவரும் ‘புனிதன்’ என்று சொல்வதற்கில்லை. இன்று தமிழினம் வேண்டி நிற்பது பழையதை மறந்து எல்லாத் தமிழ் அரசியல்கட்சிகளும் அது மிதவாதக் கட்சியென்றாலும் சரி அல்லது  போராளி இயக்கமாகவிருந்து ஜனநாயக வழிக்கு மீண்ட அரசியல் கட்சியென்றாலும் சரி எல்லோரும் ஒன்றிணைந்து ஐக்கியப்பட்ட தளத்தில் செயற்பட வேண்டுமென்பதைத்தான். இத்தகைய யதார்த்தப் பின்னணியில்,போராட்ட காலத்தில் ‘புதினம்’ பார்த்திருந்தவர்கள் மற்றும் போராட்ட வலி உணராத புதியவர்கள் பலர் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த ‘காளான்’களாக அல்லது மாரி வெள்ளத்தில் அடிபட்டுவந்த ‘ஏறுகெழுத்தி’ களாக வந்து தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்திலே தேர்தலில் நின்று குருடனுக்கு ‘வரால்’ அகப்பட்ட மாதிரிப் பதவி நாற்காலிகளைப் பிடித்துக் கொண்டு – அமைதிச் சூழலில் குளிர்காய்ந்து வண்ணம் போராளி இயக்கங்களிலிருந்து பரிணமித்த தமிழ் அரசியல்கட்சிகளைப் பார்த்துக் கைநீட்டித் ‘துரோகிகள்’ என்றும் ‘ஒட்டுண்ணிக் குழுக்கள்’ என்றும் கூறுவது யோக்கியாம்சம் பொருந்தியதாகத் தெரியவில்லை. தாங்கள் மட்டுமே தமிழ்த் தேசியவாதிகள் எனத்தம்பட்டம் அடிக்கும் தமிழரசுக் கட்சியிலுள்ள சில ‘ஆசாடபூதி’ களை –‘போலித் தமிழ்த் தேசிய வாதி’களை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்காதவரை - அத்தகையோரை ஓரங்கட்டாதவரை தமிழர்களிடையே – தமிழ்க்கட்சிகளிடையே ஐக்கியம் ஏற்பட்ட மாட்டாது. பதவி சுகத்திற்காக மட்டும் தமிழரசுக்கட்சிக்குள் வந்துள்ள ‘வழிப்போக்கர்’ களால்தான் ஐக்கியத்திற்குப் பிரச்சினை.

உண்மையில் போராளி இயக்கங்களிலிருந்து பரிணமித்த தமிழ் அரசியல் கட்சிகள் எல்லாமே அவர்களுடைய சரிபிழைகளுக்கு அப்பால் ஐக்கியப்படவும் அதற்கான விட்டுக் கொடுப்புகளுக்கும் தயாராகவே உள்ளன. அந்த மனப்போக்கு அவர்களிடம் உள்ளது. ஏனெனில் சரிபிழைகளுக்கு அப்பால் ஒருகாலகட்டத்தில் உயிரைவிடவும் துணிந்து தமிழ்த் தேசியத் தளத்தில் காலூன்றி நின்று போராடியவர்கள் அவர்கள். ஆனால் தமிழரசுக்கட்சிதான் தனது அரசியல் ‘பூர்சுவா’ குணாம்சம் காரணமாகவும் - பாரம்பரியத் தமிழ்க்கட்சி என்ற ‘பண்ணையார்’ (நிலப்பிரபுத்துவ) மனப்பான்மையினாலும் -‘வாக்குவங்கி’ த் திமிரினாலும் ஐக்கியத்திற்கும் அதற்கான விட்டுக் கொடுப்புக்கும் தடையாக உள்ளது. இந்தத் தடை நீங்க வேண்டுமானால் அதாவது தமிழரசுக் கட்சி தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டுமானால், தேர்தல்களிலே போட்டியிடும் நோக்கத்திற்காக மட்டுமே தமிழரசுக்கட்சியில் இணைந்தவர்களும் சில தனிநபர்களின் தேவைகளுக்காகவும் வசதிக்காகவும் கட்சிக்குள் இழுத்துவரப்பட்டு இன்று கூலிக்கு மாரடிப்பவர்களும் கட்சியின் கடைசி வரிக்குத் தள்ளப்பட்டு தமிழரசுக் கட்சியுடன் நீண்டகாலத் தொடர்புடைய நிஜத் தமிழ்த்; தேசியவாதிகள் கட்சியின் முன்வரிசைக்கு நகர்த்தப்பெறல் வேண்டும். இது தாமதப்படுமானால் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து அந்நியமாதல் தவிர்க்க முடியாததாகிவிடும். அதற்கான எச்சரிக்கை மணிதான் நடந்த முடிந்த உள்ளுராட்சி அதிகாரசபைத் தேர்தல் முடிவுகள்.

மக்களுக்காகத்தான் கட்சியே தவிர தனிநபர்களுக்காகவும் கட்சிக்காகவும் மக்கள் அல்ல. தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் பழைய பகைமைகளை மறந்து ஒரணியில் சங்கமித்து ஐக்கியப்பட்டால் மட்டுமே தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை ஏற்படும். இதுவே சமகாலத் தேவையுமாகும். 

-தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்-

நன்றி- தேனீ

No comments:

Post a Comment